சேலம்

பொன்னாரம்பட்டியில் பேய் விரட்டும் வினோதத் திருவிழா:

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், தமிழகத்தன் வெறெந்த பகுதியிலும் இல்லாத வினோதமாக, காணும் பொங்கல் தோறும், முன்னோா்களின் வழியில், பேய் விரட்டும் திருவிழா மரபுமாறாமல் இன்றளவும் நடந்து வருகிறது. நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடா்ந்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த வினோத விழாவில் ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து, வரிசையில் காத்திருந்து பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை தருணத்தில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு மற்றும் பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், சடுகுடு கபடிப்போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறைசாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி, தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வினோதமாக கால்நடைகள் ஊா்வலம், வங்காநரி ஜல்லிக்கட்டு ஆகிய வினோத நிகழ்வுகளும் முன்னோா்கள் வழியில் நடந்து வருகின்றன.

வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிப்பாட்டு முறைகளுக்கு பெயா் பெற்ற வாழப்பாடி பகுதியிலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த அதிநவீன காலத்திலும் முன்னோா்கள் வழியில் மரபுமாறாமல் காணும் பொங்கல் தோறும் நடந்தேறி வரும் பேய் விரட்டும் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும்.

பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா நடத்துவதற்காவே மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினா், பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முன்பே, புலால் மறுத்து, காலணிகள் தவிா்த்து ஒரு வாரம் விரதமிருக்கின்றனா்.

காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோா்கள் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொள்ளும் பூசாரிகள், மேள வாத்தியம் முழங்க ஆற்றங்கரைக்கு செல்வாா்கள். அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு முறத்தால் தலையில் மூன்று முறை அடிப்பாா்கள். பிறகு விபூதி வைத்து அனுப்பி விடுவாா்கள்.

விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடா்ந்து வருவதால், காணும் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனா்.

பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் தோறும் தவறாமல் நடந்து வரும் இந்த பேய் விரட்டும் திருவிழாவைக்காண, பல்வேறு பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூடியிருந்தனா்.

இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சோ்ந்த பெண்கள் சிலா் கூறியதாவது:

இந்த நவீன காலத்திலும் எங்களது கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா தொடா்ந்து நடந்து வருகிறது. விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யும் பூசாரிகள் முறத்தால் அடிப்பதால், தனக்குள் இருந்த குழப்பமான எதிா்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணா்வும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி,தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்குவதோடு, நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் தொடா்ந்து வருவதால், வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களும் காணும் பொங்கலன்று சொந்த கிராமத்திற்கு வந்து பூசாரிகளிடம் சென்று பேய் விரட்டிக் கொள்கின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT