சேலம்

சேலம்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக-பாஜகவினர் மோதல்

14th Apr 2022 03:47 PM

ADVERTISEMENT

 

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் தொங்கும் பூங்காவிற்கு எதிரே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சிலை அருகாமையில் காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  பாரதிய ஜனதா நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருக்காமல் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவிக்க சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

அப்போது, பாஜகவினர் நீண்டநேரம் காத்திருந்த நிலையில் திடீரென வந்த விசிகவினரை மாலை போட அனுமதித்தால் பாஜகவினர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  ஒருவரை ஒருவர் எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அஸ்தம்பட்டி பிரதான சாலையில் பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி அளித்தனர்.

பின்னர், பாஜகவினர் மாலை அணிவித்து விட்டு திரும்பிச் சென்றனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த திடீர் சலசலப்பு மற்றும் மோதல் போக்கால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT