சேலம்

அதிகரிக்கும் வெயில்: தம்மம்பட்டியில் பால் உற்பத்தி குறைவு

10th May 2021 01:40 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் கோடை வெயிலின் தாக்கத்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, வாழக்கோம்பை, கொண்டையம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், அதிகளவு கறவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதன்மூலம், இப்பகுதியில் அதிகளவு பால் உற்பத்தியாகிறது. இதனை, 20 க்கும் மேற்பட்ட தனியார் பால்நிறுவனங்கள், ஊர்கள் தோறும், கொள்முதல் மையங்கள் அமைத்து பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கி வருகிறது. இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால், திருச்சி, சேலம், வாழப்பாடி,  கருமாபுரம் உள்ளிட்ட ஊர்களில் செயல்படும் தனியார் பால் நிறுவனங்களுக்கு செல்கிறது. 

தினமும், மிக அதிகளவில் அனுப்பப்பட்ட பாலின் அளவு, தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், குறைந்துள்ளது. கறவை மாடுகள், கறக்கும் பாலின் அளவு, வெப்பத்தாலும், போதிய தீவனங்கள் கிடைக்காததாலும் குறைந்துள்ளது. இதுகுறித்து, தம்மம்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது, 'ஆண்டுதோறும், கோடை காலத்தின் உச்சமான, மே மாதம் அக்னிநட்சத்திரம் நாள்களில், பால் அதிகம் கறக்கும் ஹெச்.எஃப். கலப்பின மாடுகள், வெயிலின் வெப்பத்தை தாளமுடியாமல், அதிகளவு மூச்சு வாங்கும். அதனால், மாடுகளுக்கு நீர்ச்சத்து அளவு குறையும்.

இந்த குறைபாட்டால், கடந்த மாதங்களை விட, தற்போது பாலின் அளவு குறையும். இதனால், இப்பகுதியில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது, என்றனர். இதுகுறித்து, கால்நடை மருத்துவர் கூறியதாவது, வெயிலின் தாக்கத்தில் இருந்து மாடுகளை பாதுகாக்க, தினமும் காலை 9 மணிக்கு மேல் வெயிலில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது. மரநிழல், கீற்று வேய்ந்த கொட்டகைகளில் மாடுகளை கட்ட வேண்டும். மூச்சு வாங்கும் மாடுகளை குளிர்ந்த தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும்.

ADVERTISEMENT

மாடுகளுக்கு சத்துக்குறைபாடு ஏற்படாமல் இருக்க கால்சியம் டானிக், தாது உப்புக் கலவையை தீவனத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும், என்றார்.
 

Tags : Thammampatti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT