சேலம்

தமிழகத்துக்கு இரண்டு தலைமைச்செயலாளர்களை வழங்கிய சேலம் மாவட்டம்!

DIN

தமிழகத்துக்கு இரண்டு தலைமைச் செயலாளர்களை வழங்கிய பெருமையை சேலம் மாவட்டம் பெறுகிறது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சேலத்தைச் சேர்ந்த வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கே.சண்முகம், அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்த அ.வெங்கடாசலம், பேபி சரோஜா தம்பதிக்கு கடந்த 1963 இல் மகனாகப் பிறந்தவர் வெ.இறையன்பு. இவர் தனது பள்ளி படிப்பை சுப்பிரமணிய நகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார்.

இவரது சகோதரர் வெ.திருப்புகழ், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை முகமையின் ஆலோசகராக தில்லியில் பணியாற்றி வருகிறார். இவர் குஜராத் மாநில பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். பிரதமர் மோடியின் நம்பிக்கை மிக்க அதிகாரியாக விளங்கி வருகிறார். இவரது மூத்த சகோதரி வெ.பைங்கிளி ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். அதேபோல மற்றொரு சகோதரி வெ.இன்சுவை ஆங்கில பேராசிரியை ஆவார். இவர் எழுத்தாளராக உள்ளார். புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் தந்தை அ.வெங்கடாசலம், சேலம் சுப்பிரமணியம் நகரில் வசித்து வருகிறார். 

நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வெ.இறையன்பு, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டம் பெற்றார். பின்னர் அகில இந்திய போட்டி தேர்வுகளில் பங்கேற்று ஐ.ஆர்.எஸ். தேர்வு பெற்றார். ஐ.ஏ.எஸ். மீதான ஆர்வம் காரணமாக விடாமுயற்சி கொண்டு படிக்க ஆரம்பித்து இரண்டாவது தடவையாக சிவல் சர்வீஸ் தேர்வெழுதினார். 1987 இல் அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 15 ஆம் இடம் பிடித்தார். தமிழகத்தில் முதலிடம் பிடித்தார்.நாகப்பட்டினத்தில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார்.

பின்னர் காஞ்சிபுரம் ஆட்சியராகவும், எட்டாவது உலகத்தமிழ் மாநாடு தனி அலுவலராகவும், சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை, சுற்றுச்சூழல் துறை செயலராகப் பணிபுரிந்து வந்தார். பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வந்த வெ.இறையன்பு சிறந்த நிர்வாகி, கல்வியாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளர் என பன்முக திறமையைக் கொண்டவர். தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்...:தமிழ் ஆர்வமிக்க வெ.இறையன்பு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மூன்று நூல்களை எழுதியுள்ளார். சாகாவரம், ஏழாவது அறிவு மூன்று  பாகம், ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும், அரிதாரம், காகிதம்,வனநாயகம், மருந்து, வேடிக்கை மனிதர்கள், முதல் தலைமுறை, தரிசனம், சுய மரியாதை, அச்சம் தவிர், வியர்வைக்கு வெகுமதி, உலகை உலுக்கிய வாசகங்கள், சேமிப்பு,  சிக்கனம், வைராக்கியம், மூளைக்குள் சுற்றுலா, காற்றில் கரையாத நினைவுகள், நமது அடையாளங்களும், பெருமைகளும் ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

முதலாவது தலைமைச் செயலாளர் கே.சண்முகம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கே.சண்முகம், கடந்த 2019 அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1985 இல் தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர். தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தமிழக அரசின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதில் கே.சண்முகம், வெ.இறையன்பு ஆகிய இரண்டு தலைமைச் செயலாளர்களை தமிழகத்துக்கு வழங்கிய பெருமையை சேலம் மாவட்டம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT