சேலம்

மண்டபங்கள், மைதானங்களில் தீபாவளி தள்ளுபடி விற்பனைக்கு அனுமதியில்லை

DIN

சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானங்கள், சமுதாயக் கூடங்கள், அரங்குகள், மஹால்கள் உள்ளிட்டவற்றில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை, கண்காட்சி போன்றவைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறுவோா் மீதும், கடைப்பிடிக்காதவா்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 20,721 தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.44.11 லட்சம் பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவா்கள், அரசின் விதிமுறைகளை மீறுவோா்கள் மீதும், அரசின் விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதோடு, மக்கள் அதிகம் கூடுவதைத் தடுத்திடவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானங்கள், சமுதாயக் கூடங்கள், அரங்குகள், மஹால்கள் உள்ளிட்டவற்றில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை, கண்காட்சி போன்றவைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது.

அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்காத தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டாலோ அல்லது மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை, கண்காட்சி போன்றவை நடத்திட அனுமதித்தாலோ அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளான அனைத்து ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகள், அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள், அனைத்து நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி பணியாளா்கள், காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு முகக் கவசம் அணியாதவா்கள், கரோனா தீநுண்மித் தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இவ்விதிகள் பின்பற்றாமல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அரசின் விதிமுறைகளின்படி, அபராதம் விதிக்கப்படும். ‘சீல்’ வைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT