சேலம்

வாழப்பாடியில் இளைஞரை கொலைசெய்து எரித்த நண்பர்கள்

30th Nov 2020 10:39 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் கொலை செய்து எரிக்கப்பட்டவர் வாழப்பாடியில் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் போடும் இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், தீ வைத்து எரிக்கப்பட்ட  நிலையில் ஆண் ஒருவரது சடலம்  கிடப்பதாக வாழப்பாடி காவல்துறைக்கு இப்பகுதி மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வாழப்பாடி டி.எஸ்.பி., வேல்மணி, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை  கைப்பற்றினர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  தகவல் அறிந்த சேலம் எஸ்.பி தீபா கனிகர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கொலையுண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து வாழப்பாடி  காவல்துறையினர் விசாரணை நடத்திட உத்தரவிட்டார். இந்நிலையில், கருகிய நிலையில் கிடந்த உடல் வாழப்பாடியில் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் போடும் இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

வாழப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சக்திவேல் (வயது 26). இவர், வாழப்பாடி எழில் நகர் பகுதியில் தனியார் பால் ஏஜென்ட் கடை நடத்தி வரும் இவரது அக்கா வீட்டில் தங்கி, கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் போடும் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களான இவர்களுடன், சக்திவேலும் சேர்ந்து, இரவு நேரத்தில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பால் போடும் வேலை முடிந்ததும் வீட்டை விட்டு வெளியே  சென்ற சக்திவேல் வீடு திரும்பவில்லை.

நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இவரது நண்பர்கள், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், இவரை கல்லால் தாக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கருகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, சேலம் எஸ்பி தீபா கனிகர், உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்டவர் இளைஞர் சக்திவேல் என்பதை உறுதி செய்த இவரது மற்ற நண்பர்களும், உறவினர்களும், கொலை செய்துவிட்டு சேலத்தில் தலைமறைவாக இருந்த வாழப்பாடியைச் சேர்ந்த இவரது நண்பர்களான, ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருமலை( 20) மற்றும் திலீப்(18) ஆகிய இருவரையும் தேடி பிடித்து தாக்கி, சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைத்தனர்.

கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி காவலர்கள்,  இந்த இளைஞர்கள் இருவரையும் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Tags : murder
ADVERTISEMENT
ADVERTISEMENT