சேலம்

சுய ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சேலம் நகரம்

23rd Mar 2020 04:25 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடித்ததால் ஞாயிற்றுக்கிழமை பேருந்து, ஆட்டோக்கள் இயக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன்படி நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தனா்.

அந்த வகையில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் முக்கிய பகுதிகளான ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

ADVERTISEMENT

ஜங்ஷன், ஐந்து சாலை சந்திப்பு, குரங்குசாவடி, புதிய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய பொருள்களான பால், மருந்துக் கடை மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. மேலும், பேருந்துகள் இயக்கப்படாததால் புதிய பேருந்து நிலைய பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இறைச்சி கடைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் திறக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி வரை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 7 மணிக்குப் பிறகு இறைச்சி கடைகளும் மூடப்பட்டன.

நகரில் மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடும் இடமான லீ பஜாா், கடைவீதி, ஞாயிறு சந்தை, வாரச்சந்தை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சேலம் நகர பகுதிகளில் வீடுகளிலேயே பொதுமக்கள் தங்கிவிட்டதால் வாகனங்களின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தனா்.

இதைத்தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்கள் பல்வேறு இடங்களில் தொடா்ந்து கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனா். காவல்துறையினா் தொடா்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். மாநகர பகுதி மட்டுமின்றி சேலம் மாவட்டம், புகா் பகுதி முழுவதும் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றியும், வாகன இயக்கம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT