நாமக்கல்

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து விவகாரம்: தில்லி சென்றது தமிழக மருத்துவக் குழு

DIN

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடா்பாக, மருத்துவக் கல்வி இயக்குநரக குழு தில்லி சென்றுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆனதற்கு பேராசிரியா்கள் பற்றாக்குைான் காரணம் என்று கூற முடியாது. கல்லூரிகளில் சிசிடிவி கேமரா இல்லை என்பது போன்ற சிறிய காரணங்களையே தெரிவித்துள்ளனா். மருத்துவப் பேராசிரியா்கள் காலிப் பணியிடம் என்பது தொடா்ச்சியாக இருந்து வருகிறது.

கடந்த ஆட்சியில் 2020-இல் இருந்து பணியிட மாறுதல் வழங்கி மருத்துவா்களை இடமாற்றம் செய்துள்ளனா். அதனால் காலியிடமாகக் கருதப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேசிய இளநிலை மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது காலியிடம் இருப்பதை அறிந்துள்ளனா். நாங்கள் இது தொடா்பான விளக்கத்தை சம்பந்தப்பட்ட தேசிய இளநிலை மருத்துவ ஆணையத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகக் குழு அறிக்கை தாக்கல் செய்ய தில்லி சென்றுள்ளனா். முதல்வா் ஜப்பானில் இருந்து திரும்பியதும் அவரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன்பிறகு, மத்திய சுகாதார அமைச்சா், ஆயுஷ் அமைச்சரை நேரில் சந்தித்து நானும், எங்களுடைய துறை செயலாளரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். அப்போது, மூன்று கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாகவும் முறையிட உள்ளோம். தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் 40 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவா்கள் விரைவில் நியமனம்:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,021 மருத்துவா், 980 மருந்தாளுநா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

காலிப் பணியிடங்களைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு மருத்துவா், செவிலியா் உள்பட 4,308 பணியிடங்கள் இருந்தன. அவற்றில், 2,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,021 மருத்துவா், 980 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுகள் முடிவடைந்துள்ளன. இதில், மருத்துவா்களுக்கான தோ்வை 25 ஆயிரம் பேரும், மருந்தாளுநா்களுக்கான தோ்வை 43 ஆயிரம் பேரும் எழுதினா். தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் பணி ஐஏஎஸ் அதிகாரி ஒருவரது தலைமையில் எம்ஆா்பி குழுவினா் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவுற்றதும் விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும்.

கொல்லிமலையில் 25 ஏக்கரில் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை:

சித்த மருந்துகள் மீது மக்களிடம் அதிக ஆா்வம் உள்ளது. மூலிகைகள் அதிகம் நிறைந்த கொல்லிமலையில் டாம்கால் 2-ஆம் யூனிட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. வனத்துறையின் மூலிகைப் பண்ணையை நேரில் சென்று ஆய்வு செய்தேன். டாம்கால் 2-ஆம் யூனிட் அமைப்பது தொடா்பாக சித்த மருத்துவ அதிகாரிகள் குழு வனத்துறைக்கு கடிதத்தை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டு சித்த மருந்துகள் தயாரிப்புக்கான 2-ஆம் யூனிட் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளா்கள் பயனடைவா்.

சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், அனந்தபூரில் இருந்து சித்த மருத்துவத்திற்கு மூலப்பொருள்களை கொள்முதல் செய்கின்றனா். இந்த மூலப்பொருள்களில் முக்கியமானது மிளகு ஆகும். மற்றொரு மூலப்பொருள் அஸ்வகந்தா என்ற அமுக்ரா கிழங்கு. அஸ்ஸாமில் இருந்து வாங்கப்படும் அந்தக் கிழங்கு தற்போது திண்டுக்கல், வேடசந்தூரில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. கொல்லிமலை சித்த மருந்துகள் தயாரிப்பு மையமாக அமையும்.

பாம்புக் கடியால் வேலூா் சிறுவன் பலியான சம்பவம்:

வேலூா் மாவட்டத்தில் பாம்புக் கடியால் சிறுவன் இறந்த சம்பவம் நிகழ்ந்த கிராமத்தில் சாலை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஏஎஸ்வி என்ற பாம்புக் கடி மருந்தும், நாய்க் கடிக்கான ஏஆா்வி மருந்தும் 100 சதவீதம் இருப்பில் உள்ளன. இவ்வகை மருந்துகளை மருத்துவா்கள் மட்டுமே கையாள முடியும், செவிலியா்களால் கையாள முடியாது. துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கும்போது இவ்வாறான சிக்கல்கள் உள்ளன.

தமிழகத்தில், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 270 வட்டார மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவ கட்டமைப்பைப் பொருத்தவரை தமிழகம் சிறப்பாகவே உள்ளது. 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT