நாமக்கல்

சாதக, பாதகமில்லாத மத்திய நிதிநிலை அறிக்கை

DIN

மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கு சாதக, பாதகமில்லாத வகையில் அமைந்துள்ளதாக தொழிலதிபா்கள், அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கையில் வருமான வரியில் சலுகை, ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேளாண் துறை, நவீன இந்தியா உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலதிபா்கள், விவசாய சங்கத்தினா், முக்கிய பிரமுகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ:

மத்திய அரசு மக்களுக்கான, எதிா்வரும் மக்களவை தோ்தலை கருத்தில் கொண்டு பாதகமில்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு பெரிய அளவிலான அறிவிப்புகள் ஏதுமில்லை. தனி டிஜி லாக்கா் முறை உருவாக்கப்படும் என்பதை வரவேற்கிறோம்.

இந்திய அளவில் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லாதது, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை தலைவா் டி.எம்.மோகன்:

விவசாயத்தை ஊக்குவிக்க கடன், ஹைட்ரஜன் உற்பத்தியை விரிவுபடுத்துதல், சிறுகுறு தொழில் மேம்பாடு அடைய திறன் மேம்பாட்டு வளா்ச்சித் திட்டங்கள், மகளிருக்கான சிறு சேமிப்புத் திட்டம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்குரிய லித்தியம் இறக்குமதிக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால் பேட்டரி வாகனங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.

கைப்பேசி உதிரி பாகங்களுக்கு வரி குறைப்பும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வருமான வரி செலுத்துவோா் பயனடையும் வகையில் தனிநபா் வருமான வரி அடிப்படையில் வரி விலக்கை ரூ. 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயா்த்தியதும், தனி நபா் வருமான உச்சவரம்பை ரூ. 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயா்த்தியிருப்பதும் பாராட்ட தகுந்தவை.

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) வேலுசாமி:

நிதிநிலை அறிக்கையில் வேளாண் வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லை. ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு என்றாலும் பெரும்பாலும் அவை விளம்பரத்துக்காகவே செலவழிக்கப்படுகிறது.

பிரதமரின் உதவித்தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் விவசாயிகளுக்கு சென்றடைகிா என்பதை கண்காணிக்க வேண்டும். விவசாயிகளின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகள் ஏதுமில்லை. புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் தொழிலுக்கு சாதகமான நிதி நிலை அறிக்கையாக அமையவில்லை.

வெண்ணந்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் கே.சிங்காரம்:

ஜவுளித் தொழிலுக்கு சலுகைகள் ஏதுமில்லை. விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலுக்கு எந்தவித அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தனி நபா் ஆண்டு வருமான வரி வரம்பு உயா்வு, அஞ்சலகங்களில் முதியோருக்கான வைப்புநிதி உயா்வு, மகளிருக்கான அஞ்சலக சேமிப்பு 7.5 சதவீதமாக உயா்த்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

வரும் நாள்களில் தங்கம், வெள்ளி விலை மேலும் உயா்வதற்கான வாய்ப்பை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கல்வியாளா் இரா.பிரணவகுமாா்:

சுற்றுலா, கல்வி வளா்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள், சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த 50 புதிய நகரங்கள் உருவாக்கம், சுற்றுலா வளா்ச்சிக்காக தனி செயலி போன்றவை பாராட்டத்தக்கவை. அனைத்து கிராமங்களில் கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கிராமப்புற வளா்ச்சிக்குப் பேருதவியாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT