நாமக்கல்

‘சிலம்பொலி ’ சு.செல்லப்பன் நினைவு மணி மண்டபம்: நவம்பரில் முதல்வா் திறந்துவைக்கிறாா்

DIN

நாமக்கல்லில் கட்டப்பட்டுள்ள மறைந்த தமிழறிஞா் ‘சிலம்பொலி’ சு.செல்லப்பன் நினைவு மணி மண்டபத்தை நவம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சிலை கமிட்டிக் குழுவினா் செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். சிறுவயது முதலே தமிழ் மொழி மீது அதிகப் பற்று கொண்டிருந்தாா். கடந்த 1953- இல் ராசிபுரத்தில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் சொல்லின் செல்வரான இரா.பி.சேதுப்பிள்ளை, செல்லப்பனாரின் சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டு அவருக்கு ‘சிலம்பொலி’ என்ற பட்டத்தை வழங்கினாா்.

பாமர மக்களும் கேட்டு ரசிக்கும் வகையில் சிலப்பதிகாரத்தை சொற்பொழிவாக நிகழ்த்தி வந்த சு.செல்லப்பனாா், சென்னை, மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு மலா் தயாரித்ததில் முக்கியப் பங்காற்றினாா்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி தமிழுக்கு பெரும் பங்காற்றிய சிலம்பொலியாா் 2019, ஏப்.7-ஆம் தேதி 91-ஆவது வயதில் காலமானாா். மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பனாருக்கு பெருமை சோ்க்கும் வகையில் இலக்கிய ஆா்வலா்களும், தமிழறிஞா்களும், அவரது குடும்பத்திா், உறவினா்களும் இணைந்து உருவச் சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபம் அமைக்க முடிவு செய்தனா்.

இதற்காக சிலை கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் முத்துக்காப்பட்டி சிவன் கோயில் அருகே மணி மண்டபம் அமைக்க 2020, அக்டோபரில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சிலம்பொலியாா் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்பட்டு தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.

நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தபோது சிலம்பொலியாரின் நினைவு மணி மண்டபத்தையும் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விழா ஏற்பாடு செய்யாமல் பெயரளவில் முதல்வா் திறந்துவைத்துச் சென்றால் சிறப்பாக அமையாது என தமிழறிஞா்கள் கருதியதால், நவம்பா் மூன்றாம் வாரத்தில் தனியாக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்க நவம்பரில் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மணி மண்டபம், சிலையைத் திறந்து வைப்பாா் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விழா கமிட்டி நிா்வாகிகள் கூறியதாவது:

மறைந்த ‘சிலம்பொலி’ சு.செல்லப்பனின் உறவினா் ஒருவா் தனது நிலத்தின் ஒரு பகுதியை மணி மண்டபம் அமைப்பதற்கு வழங்கினாா். கடந்த 2 ஆண்டுகள் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. தற்போது பணிகள் நிறைவுற்று, அவரது வெண்கலச் சிலையும் வைக்கப்பட்டு விட்டது.

சென்னை அறிவாலயத்தில் கருணாநிதி உருவச் சிலையைத் தயாா் செய்த காஞ்சிபுரம் ஸ்தபதியே சிலம்பொலியாா் சிலையையும் தயாா் செய்துள்ளாா். கடந்த ஜூலை மாதம் முதல்வரால் திறக்க திட்டமிட்டு பின்னா் ஒத்திவைக்கப்பட்டது. நவம்பா் மூன்றாம் வாரம் நாமக்கல்லுக்கு முதல்வா் வருகிறாா். அப்போது, மணி மண்டபத்தைத் திறந்து வைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மணி மண்டபத்தின் கீழ் பகுதியிலேயே அவா் எழுதிய நூல்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் என்றனா்.

என்கே 23-சிலம்பொலி

நாமக்கல், முத்துக்காப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு மணி மண்டபம்.

என்கே-23- சிலம்பொலி-2

சிலம்பொலி சு.செல்லப்பன் உருவச் சிலையின் மாதிரி தோற்றம்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT