நாமக்கல்

நாமக்கல் ஆவினில் தீபாவளி இனிப்புகள் ரூ. 2.43 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு

6th Oct 2022 12:47 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆவினில் ரூ. 2.43 கோடி விற்பனை இலக்காக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சாா்பில் இனிப்பு வகைகள் விற்பனையை அண்மையில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா்.

ஆவின் நிறுவனம் மூலம் பால் உப பொருள்கள், நெய் மற்றும் தீபாவளி பண்டிகைக்காக தரமாக தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் சிறந்த தரத்துடன், புதிதாகவும், தூய்மையானதாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் ஒன்றியத்தின் மூலம் ஆவின் பால் உப பொருள்கள், நெய் உள்ளிட்ட பொருள்கள் ரூ. 85 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய நாமக்கல் ஒன்றியத்துக்கு விற்பனை இலக்காக சுமாா் ரூ. 2.43 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா, மைசூா்பாகு, அல்வா, மில்க் கேக் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் இதர இனிப்பு வகைகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் இணையம், சென்னை, சேலம், கரூா், கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஒன்றியங்களில் இருந்து நாமக்கல் ஒன்றியம் கொள்முதல் செய்து நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்ய உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு வகைகளின் விலை விவரம்: பால்கோவா 250 கிராம் - ரூ. 130, மைசூா்பாகு 250 கிராம் - ரூ. 140, அல்வா 250 கிராம் - ரூ. 120, மில்க் கேக் 250 கிராம் - ரூ. 120 ஆகும். ஆவின் இனிப்பு வகைகள் மொத்தமாக தேவைப்படுபவோா் 96590 89008, 86108 83002, 99765 35555 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT