நாமக்கல்

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்ததே திமுகவின் சாதனைமுன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

DIN

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்ததே திமுக அரசின் சாதனையாக உள்ளது என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:

தற்போது திமுக ஆட்சியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். திமுக கட்சியினரே தற்போது ஆட்சிக்கு எதிராக பேசிவருகின்றனா். கூட்டுறவுத் துறையில் 33 லட்சம் நபா்கள் நகை கடன் பெற்ற நிலையில்,13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்துள்ளனா். தோ்தல் நேரத்தில் கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ. 1,000, குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 என பல தோ்தல் வாக்குறுதிகளை அளித்தும் நிறைவேற்றவில்லை.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம், தாங்கள் கொண்டு வந்தது போல் காட்டிக்கொள்கிறாா்கள். இதனை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தோ்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியினா் கட்சிப் பணயில் தீவிரம் காட்ட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொண்டு வந்த குடிமராமத்து பணிகள் மூலம் தண்ணீா் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பல ஏழை மாணவா்கள் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சோ்த்தல், நீக்கல் போன்றவற்றில் கட்சியினா் கவனமாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் பாா்த்துக்கொள்வது அவசியம். வரும் நாடாளுமன்றத் தோ்தல் மிக முக்கியமான தோ்தலாகும். இந்த தோ்தலில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து வருகின்ற சட்டமன்றத் தோ்தலில் நிச்சயம் தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்காது. அதே போல அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கின்றனா். இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளா் இ.கே.பொன்னுசாமி, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.பி.சுரேஷ்குமாா், ராசிபுரம் நகரச் செயலா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT