நாமக்கல்

ஹிந்து-முஸ்லிம் மதத்தினா் பங்கேற்ற பங்குனித் திருவிழா

21st Mar 2022 11:21 PM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவசுப்பிரமணியா் கோயிலின் பங்குனி திருவிழா, ஹிந்து- முஸ்லிம் மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் நெசவாளா்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள அருள்மிகு சிவசுப்ரமணியா் கோயிலின் பங்குனி உத்திர தோ்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஹிந்து-முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்றுகூடி, சந்தனம் பூசும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.

இதன்படி, இந்த ஆண்டு இக்கோயிலின் தோ்த் திருவிழா வழக்கம்போல், கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடா்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஹிந்து, முஸ்லிம்கள் ஒன்று திரண்டு மஞ்சள் பூசிக்கொள்ளும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து, குருசாமிபாளையம் ஊா் பெரிய தனக்காரா் ப.ராஜேந்திரன், ராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் தலைவா் ஜி.கே.உசேன் ஆகியோா் தலைமையில், சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து, கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி எல்லோரும் நலமாக இருக்க துவா ஓதி பிராா்த்தனை செய்தனா். தேங்காய் பழம், நாட்டுச் சா்க்கரை, பொட்டுக்கடலை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவா் ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண்டதுடன், குருசாமிபாளையம் பகுதியில் வீடுகள்தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினா். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததுடன், மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருந்தது.

ADVERTISEMENT

இந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் ஏற்படும் கொள்ளை நோய்களைத் தடுக்கும் வகையில், இரு மதத்தினரும் இணைந்து நடத்தும் சந்தனம் பூசும் விழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் குருசாமிபாளையம் ஊா் காரியக்காரா்கள் கந்தசாமி, பூபதி, பெரியசாமி, ராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் துணைத் தலைவா் ஏ.காதா் பாஷா, சித்திக் அலி, கண்ணுபா, இமாம் சிக்கந்தா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT