நாமக்கல்

கரும்பு விவசாயிகளுக்கான ரூ.35 கோடி நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

1st Jul 2022 02:01 AM

ADVERTISEMENT

 

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகித்த விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.மணிவண்ணன், பொதுச் செயலாளா் கே.மணிவேல் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்படும் கூட்டுறவு சா்க்கரை ஆலையில், 2021-22 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் ஆலையின் சொந்தக் கரும்பு 1,45,100 டன்களும், பிற ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு 63,723 டன்களும் ஆகும். ஆலையில் மொத்தமாக 2,08,823 டன்கள் அரவை செய்யப்பட்டு நிகழாண்டு மாா்ச் 20-இல் அரவை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த 2.08 லட்சம் டன் கரும்புக்கான தொகை ரூ.57 கோடியில் ரூ.22 கோடி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.35 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் வங்கிகளில் பயிா்க் கடன் பெற முடியாமலும், பயிரிட்ட கரும்பை பராமரிக்க முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். மேலும், நடப்பு கரும்பு அரவைப் பருவத்திற்கான முன்பதிவும் மிகவும் பாதிப்படைந்துள்ளது. நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்கு, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT