நாமக்கல்

நாமக்கல்லில் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

6th Dec 2022 11:29 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால்கிரேஸை கண்டித்து, கல்லூரி மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் முதல்வராக பால்கிரேஸ் உள்ளார். அண்மையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு உயர்நீதிமன்றத்தை நாடி பணியிடை நீக்கத்திற்கான தடை உத்தரவை பெற்று, கடந்த மாதம் அதே கல்லூரியில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

இதையும் படிக்க.. கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

ADVERTISEMENT

தான் பழிவாங்கப்பட்டதாக அவர் நினைப்பதால், அங்குள்ள பேராசிரியர்களுக்கும், முதல்வருக்கும் இடையே தொடர்ந்து கருந்து மோதல் எழுந்து வருகிறது. இக்கல்லூரி வணிகவியல் துறையில் 250க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இத்துறை தலைவராக நல்லுசாமி என்பவர் உள்ளார். அவர் தனது துறையில் பயிலும் மாணவியரின் பயிற்சிக்கான அனுமதிக்கு கையொப்பம் வாங்க முதல்வர் பால்கிரேஸை திங்கள்கிழமை  சந்தித்தபோது, அவரைப் பார்க்க மறுத்து மாணவியர் முன்னிலையில் அவதூறாகப் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் பயிற்சி நோட்டில் கையெழுத்திட முடியாது என மறுத்து விட்டார். வணிகவியல் துறை மாணவியரும், துறை தலைமை பேராசிரியர் நல்லுசாமியும் காலை முதல் மாலை 5 மணிவரை முதல்வர் அலுவலகத்தின் வெளியே காத்திருந்தனர். இதற்கிடையே மாணவிகள் சிலரை மிரட்டி நல்லுசாமிக்கு எதிராக முதல்வர் பால்கிரேஸ் கடிதம் பெற்றுக் கொண்டாராம். மேலும் வணிகவியல் துறை தலைவர் நல்லுசாமியை கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு கூறினாராம். இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அவருக்கு சக பேராசிரியர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நல்லுசாமி கூறியது: கல்லூரியில் நிரந்தரப் பணியாளர்கள் 20 பேர் மட்டுமே உள்ளனர். நான் ஒருவர் மட்டுமே ஆண் பணியாளர். இங்கிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சென்ற பால்கிரேஸ் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொள்கிறார். மாணவியர் முன்னிலையில் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். மாணவியரை மிரட்டி எனக்கு எதிராக கடிதம் வாங்கி உள்ளார்.

கையொப்பம் பெறச் சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வைக்கிறார். கல்லூரிப் பேராசிரியர்களுக்கு எதிராக கெளரவ விரிவுரையாளர்களைத் தூண்டி விடுகிறார். பணியிடை நீக்கம் செய்து விடுவேன் என மிரட்டுகிறார். கடந்த 6 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என தெரிவித்தார். 

இதற்கிடையில் செவ்வாய்கிழமை காலை 9 மணி அளவில் கல்லூரிக்கு வந்த வணிகவியல், பொருளியியல் துறை மாணவியர் 200- க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கல்லூரி முதல்வர் பால்கிரேஸை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT