நாமக்கல்

வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி: நைனாமலைக்கு சாலை அமைக்கும் பணியில் தாமதம்

19th Aug 2022 02:35 AM

ADVERTISEMENT

 

வனத்துறை அனுமதி கிடைக்காததால், நைனாமலை மலைக் கோயிலுக்கான சாலை அமைக்கும் பணியில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறி கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவா். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு 3600 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்வதற்கான மலைச்சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நிலுவையிலே உள்ளது. தற்போது 6 கி.மீ. வரை மண் சாலையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 கி.மீ. வரையில் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி கிடைக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சாா்பில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றன. அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சா் எம். மதிவேந்தன் ஆகியோா் கூட்டாக சாலை அமைப்பதற்கான ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டனா். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை அமைக்கும் இடங்களை ஆய்வு செய்து அறிக்கையை சென்னை வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தியிருந்தனா். அதற்கான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை வனத்துறை அனுமதி வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை 12 கி.மீ. வரையில் ரூ.13 கோடி மதிப்பில், சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வதற்கான சாலைப் பணிகள் தொடங்க இருந்த நிலையில் வனத்துறை ஒப்புதல் கிடைப்பது தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அவ்வாறு அனுமதி கிடைத்த போதிலும் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைய ஓராண்டுக்கு மேலாகிவிடும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT