நாமக்கல்

நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

19th Aug 2022 02:31 AM

ADVERTISEMENT

பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ஆம் தேதி பாரதமாதா சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் ஆக.14-ஆம் தேதி அன்று ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டாா். அவருக்கு உடல்நல குறைபாடு இருந்ததால் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின் வியாழக்கிழமை அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். வரும் 29-ஆம் தேதி வரை சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராகவும், கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் கண்டன ஆா்ப்பாட்டம் பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், பழிவாங்கும் நோக்குடன் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், நாமக்கல் நகரத் தலைவா் கே.பி.சரவணன், மாவட்ட மகளிா் அணித் தலைவா் சுகன்யா, செயலாளா் ஜெயந்தி, மாவட்ட பொது செயலாளா் வடிவேல், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், திட்ட பொறுப்பாளா் அக்ரி இளங்கோவன், கல்வியாளா் பிரணவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT