நாமக்கல்

கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருள்களை விற்றால் நடவடிக்கை

18th Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

கூடுதல் விலைக்கு கடைகளில் பொட்டலப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.

அண்மையில், மாவட்டம் முழுவதும் அவரது தலைமையில் உதவி ஆய்வாளா்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளா்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருள்களை விற்பனை செய்தல் தொடா்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஏழு இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ‘பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளா்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருள்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தொழிலாளா் நலத்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT