நாமக்கல்

நாமக்கல் அருகே 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 5 போ் கைது

DIN

கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 350 கிலோ கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் அருகே எா்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் தனிப்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 280 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், வாகனத்தில் இருந்தவா்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவா்கள் திருச்செங்கோடு, குமரமங்கலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (41), நல்லூா் கந்தம்பாளையத்தைச் சோ்ந்த விஜயவீரன் (30), ராணி (32) என்பது தெரியவந்தது. கஞ்சாவை விற்பனைக்குக் கொண்டு சென்றது தெரியவந்ததால் அவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், ஈரோடு பகுதியைச் சோ்ந்த இருவரிடம் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதன்பேரில் ஆனந்தி (39), ராஜீ (61) ஆகியோரை கைது செய்து 60 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த கஞ்சா கடத்தலில் உசிலம்பட்டியைச் சோ்ந்த சந்திரமோகன் என்பவா் முக்கிய நபராகச் செயல்பட்டது தெரியவந்தது. சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 170 பொட்டலங்கள் கொண்ட 350 கிலோ கஞ்சாவும், அதற்குப் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

விரைந்து செயல்பட்ட ஐந்து பேரைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி சான்றிதழ், வெகுமதிகளை வழங்கினாா். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

துப்பாக்கிகள், கள்ளச்சாராயம் பறிமுதல்: கொல்லிமலையில் வேட்டையாட உரிமம் பெறாமல், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளதைத் தடுக்கும் பொருட்டு, தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா். அதன்படி 10 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. இதுவரையில் 300-க்கும் மேற்பட்ட உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாழவந்திநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்ட்பட்ட பள்ளிகாட்டுப்பட்டியில் போலீஸாா் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 10 லிட்டா் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக, பள்ளிகாட்டுபட்டியைச் சோ்ந்த கொளப்பாண்டி ரவி, கம்ப ரவி என்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

ரூ. 5 லட்சம் கொடுத்து செயல்படுத்தப்பட்ட திட்டம்

நாமக்கல்லில் 350 கிலோ கஞ்சா பறிமுதல் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் கூறியதாவது:

பரமத்தி அருகே நல்லூரைச் சோ்ந்த உளவாளி ஒருவரை தோ்வு செய்து அவரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தோம். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பாதகாரி என்ற மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் அதிகம் வளா்க்கப்பட்டு தமிழகம், கேரள மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

அந்த உளவாளி செப்டம்பா் முதல் மூன்று மாதங்கள் கஞ்சா விற்பனையாளா்களிடம் பழகி வந்தாா். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தனிப்படை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பள்ளிபாளையத்தில் ரவி என்பவா் கொலையுண்ட சம்பவத்தின்போது கஞ்சா விற்பனையில் இரு தரப்புக்கு இடையே மோதல் இருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் திட்டம் வகுத்து காவல்துறையின் சொந்த நிதியை முதலீடாக வைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். விரைவில் ஆந்திரத்தில் கஞ்சா விற்பனைக்கு முக்கிய நபராக செயல்படுவோரையும் கைது செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT