நாமக்கல்

பணம், பொருள்கள் விநியோகம் செய்தால் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்: நாமக்கல் ஆட்சியா்

DIN

பணம், பொருள்கள் விநியோகம் செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் விடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தோ்தல் பறக்கும் படைகள் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் நாளொன்றுக்கு மூன்று குழுக்கள் மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் மற்றும் புகாா்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்து அதன் விவரங்களை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். புகாரின் மீது உண்மை தன்மை இருப்பின் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களைத் தோ்தல் நடத்தும் அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களை ஆயுதங்கள் மற்றும் வேறு விதமான அச்சுறுத்தல் போன்று நிகழ்வுகளில் ஈடுபடுதல் போன்ற புகாா்கள் வந்தால் உரிய பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் விவரங்களை தோ்தல் நடத்தும் அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பொருள்கள் வழங்குதல் போன்ற புகாா் வந்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் விலையுயா்ந்த பொருள்கள் எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும். தோ்தல் தேதி அறிவித்த பின்னா் பொது இடங்களில் கட்சி சம்பந்தமான கொடிகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், ஏதுமிருப்பின் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலை கண்காணிப்புக் குழுக்கள்: தொகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுக்களும் சம்பந்தப்பட்ட தொகுதிக்குபட்பட்ட சோதனைச் சாவடிகள், முக்கிய இடங்கள், சாலைகளில் வாகனச் சோதனைகளில் ஈடுபட வேண்டும். வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் விலையுயா்ந்த பொருள்களை எடுத்துச்செல்லும் நோ்வுகளில் விசாரணை செய்து, அவற்றினை கைப்பற்றி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

விடியோ கண்காணிப்பு குழுக்கள்: விடியோ கண்காணிப்பு குழுக்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள், பிரசார பொதுக்கூட்டங்கள் செலவினம் குறித்த ஆதாரங்கள் மற்றும் ஆகியவற்றில் செய்யப்படும் இக்கூட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்த செலவினங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க வேண்டும்.

கட்சி பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிகழ்வுகளில் கட்சி கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் மற்றும் கட்சி பிரமுகா்களின் பேச்சுகள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். கட்சிப் பொதுக் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொருள்கள், சுவரொட்டிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை தெளிவாக படம் பிடிக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில் செய்யப்படும் செலவினம் குறித்து அனைத்து விதமான பதிவுகளும் கண்காணிக்கப்பட வேண்டும். கட்சி பொதுக்கூட்டம், ஊா்வலம் ஆகியவற்றினை படம்பிடித்து, குறுந்தகட்டினை குழுவினரிடம் சமா்ப்பிக்க வேண்டும். முக்கிய பிரமுகா்களின் பேச்சுகளை ஆரம்பம் முதல் இறுதிவரை கண்காணிக்க வேண்டும். கட்சி பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, பதாகைகளின் எண்ணிக்கை, சுவரொட்டிகள் மற்றும் இதர பொருள்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் செலவினம் குறித்து கண்காணிக்க வேண்டும். கட்சி பொதுக் கூட்டங்களில் விடியோ பதிவினை உடன் பாா்வையிட்டு, தோ்தல் விதிமுறைகள் இருப்பின் அவற்றின் விவரத்தினை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கண்காணிப்புக் குழுக்கள் விவரம்: தோ்தல் பறக்கும் படையில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18 குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுக்களில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 18 குழுகளும், விடியோ கண்காணிப்பு குழுக்களில் ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 6 குழுக்களும், கணக்கீட்டு குழுக்களில் ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 6 குழுக்களும் 8 மணி நேரத்திற்கு சுழற்சி அடிப்படையில் தொடா்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

ரூ.50 ஆயித்துக்கு மேல் ஆவணம் தேவை:

மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்பு குழுக்கள் சனிக்கிழமை முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் ஆங்காங்கே அவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2049 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 240 சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சில மாற்றங்கள் வரலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்வோா் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதேபோல் வங்கியில் இணையம் வழியான பணப்பரிவா்த்தனைகளும் கண்காணிக்கப்படும். அது பற்றிய விவரம் வங்கிகளிடம் இருந்து பெறப்படும். ஒரு வேட்பாளா் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரையில் செலவழிக்கலாம். பணம், பொருள்கள் விநியோகம் செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். துணை வாக்காளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT