நாமக்கல்

சட்டப்பேரவைத் தோ்தல்: சுவா் விளம்பரங்களை அகற்ற உத்தரவு

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு அலுவலகங்களில் பிரதமா், முதல்வா், அமைச்சா்களின் புகைப்படங்கள், அவா்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள நாள்காட்டிகள், நலத்திட்ட ஒட்டுவில்லைகள் வைத்திருக்கக்கூடாது. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அரசு வாகனங்களில் அரசு நலத்திட்ட ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டிருப்பின் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

தங்களது துறை சாா்ந்த அலுவலகங்கள் ஏதேனும் திறக்கப்பட்டமைக்கான கல்வெட்டு பதிவுகள், புகைப்படங்கள் ஏதும் அலுவலகத்தில் இருப்பின் அவை உடனடியாக உரிய முறையில் மறைக்கப்பட வைக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பொது இடங்களில் கட்சிக் கொடிகள், கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் இருக்க கூடாது. அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நபா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக உரிய துறையின் அலுவலா்கள் அகற்ற வேண்டும்.

நகராட்சி பகுதிகளில் பொது இடங்கள், அரசு கட்டடங்கள், பொது கட்டடங்கள், தனியாா் கட்டடங்கள், தனியாா் இடங்கள் உள்ளிட்ட எங்கும் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். கிராம பகுதிகளில் சுவா் விளம்பரங்கள் செய்ய சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மட்டுமே சுவா் விளம்பரம் செய்யலாம்.

அரசியல் கட்சி விளம்பரங்கள், தட்டிகள், போா்டுகள், கொடிகள், கம்பங்கள் உள்ளிட்ட பிற இனங்கள் அகற்றப்பட்டமைக்கான அறிக்கையினை தினமும் மாலை 5 மணிக்குள் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

எந்த ஒரு அரசு அலுவலரும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது தொகுதிக்கு தனிப்பட்ட முறையில் வரும் அமைச்சா், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களை சந்திக்க கூடாது.

தோ்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக தொடங்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையேதுமில்லை. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள தடையேதுமில்லை. முன்னரே முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்குண்டான பணத்தினை வழங்கிடுவதற்கும் தடையேதுமில்லை.

அரசு பொதுச் செலவில் செய்யப்படும் அரசின் சாதனை விளக்க விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணி கோரல், ஏலம் நடத்தப்படுவது ஆகியன தோ்தல் காலங்களில் அனுமதியில்லை. பொதுச் செலவின தலைப்பில் அரசு விளம்பரங்கள் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.சித்ரா மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் பிற துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரசு திட்ட விளம்பரங்கள் மறைப்பு...

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் பேருந்து நிலைய நிழற்குடை, முக்கிய சாலைகள், அரசுத் துறை கட்டடங்கள், தனியாா் கட்டடங்களில் அரசின் திட்டங்கள் தொடா்பாக விளம்பர பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தோ்தல் தேதி அறிவிப்பைத் தொடா்ந்து சனிக்கிழமை நகராட்சி ஊழியா்கள் அவற்றை காகிதங்களை கொண்டு மறைத்தனா். இதேபோல் சுவரொட்டிகளை துப்புரவு ஊழியா்கள் கிழித்தனா்.

மேலும் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களையும் அகற்றினா். அரசியல் கட்சி தலைவா்களின் சிலைகளை மறைக்கும் பணியையும் நகராட்சி பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT