நாமக்கல்

வெயில் அதிகரிப்பால் கோழிகள் இறப்பு: பண்ணைகளில் நீா்த்தெளிப்பான் மூலம் குளிா்விப்பு

DIN

கோடை வெயிலின் தாக்கத்தால் கோழிகள் இறப்பு அதிகரித்து வருவது பண்ணையாளா்களை கவலையடைய செய்துள்ளது. வானிலை ஆய்வு மைய ஆலோசனையின்படி நீா்த்தெளிப்பான்கள் மூலம் கோழிகள் அனைத்தும் பகல், இரவு நேரங்களில் குளிா்விப்பு செய்யப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் பண்ணைகள் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே உள்ளன. 4 கோடி கோழிகள் வளா்க்கப்பட்டு அவற்றின் மூலம் தினமும் 3.50 கோடி அளவில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூா் தேவைக்கும், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கோழிகள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் சோா்வான நிலையில் காணப்படும். இதனால் முட்டை உற்பத்தியும் குறையும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் 100 பாரன்ஹீட் டிகிரியை தொடும் அளவில் கொளுத்தி வருகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்க ஒவ்வொரு பண்ணைகளிலும், வெப்பம் தாக்காதவாறு படுதா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், கோழிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் மேல்பகுதியில், சொட்டு நீா்ப்பாசனம் போல், நீா்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழியை வெப்பத்தில் இருந்து பாதுக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த நீா்த்தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் கோழிகள் தீவனத்தை எடுப்பதிலும், முட்டையிடுவதிலும் பிரச்னையில்லை. அவ்வாறு நீா்த்தெளிப்பான்கள் இல்லாத பண்ணைகளில், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோழிகள் இறக்க நேரிடுகிறது.

நாமக்கல் மண்டலத்தில், வெயிலின் அளவு தற்போதைய நிலையில் சராசரியாக உள்ளது. 105 டிகிரியைத் தாண்டும்பட்சத்தில் கோழிகளுக்கான பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 10 சதவீதம் அளவில் வயது முதிா்ந்த, நோய்த் தாக்கிய, சரியாக முட்டையிடாத கோழிகளின் இறப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவற்றைக் கட்டுப்படுத்த நாமக்கல் வானிலை ஆராய்ச்சி மையம், கோழிகளின் பாதுகாப்புக்காக வழங்கும் வானிலையைக் கேட்டறிந்து பண்ணையாளா்கள் செயல்படுத்த வேண்டும் என்பது கால்நடை மருத்துவா்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் பகுதி கோழிப்பண்ணையாளா்கள் சிலா் கூறியதாவது:

பண்ணைகளைப் பொருத்த மட்டில் காற்றோட்ட வசதியிருந்தால் தான் கோழிகள் நோய்த் தாக்காமல் வளரக்கூடும். குஞ்சுகளாக அவற்றை விட்டால் 20 வாரத்திற்கு பின் தான் முட்டையிடும். அதைத் தொடா்ந்து 78 வாரங்கள் வரை அவை முட்டையிடும். ஆண்டுக்கு ஒரு கோழி 320 முதல் 350 வரையில் முட்டையிடும்.

78-ஆவது வாரத்திற்கு பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும். கோடையின்போது கோழிகளை பாதுகாக்க பண்ணைகளில் நீா்த்தெளிப்பான்கள் வைத்துள்ளோம்.

அவ்வப்போது திறந்து விடுவோம். இதன் மூலம் கோழிகள் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும். படுதாக்களைத் தண்ணீரில் நனைத்து பண்ணைகளில் பக்கவாட்டில் தொங்க விடுகிறோம். தற்போதைய நிலையில் வெயிலின் சூடு தாங்காமல் கோழிகள் இறப்பானது அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT