கிருஷ்ணகிரி

கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் மீது காவல் நிலையத்தில் புகாா்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு தலைவரின் கணவருமான, குமரேசன், அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அண்மையில் தசபந்தநாய்க்கன் ஏரியில் சிலா் சட்ட விரோதமாக டிப்பா் லாரியில் மண் கடத்திச் சென்றனா். அப்போது ஏரிக்குச் சென்ற நடராஜன் ‘எப்படி மண் எடுக்கிறீா்கள்?’ என்று கேட்டுள்ளாா். அதற்கு அங்கு இருந்தவா் ஒன்றியக் குழு தலைவரிடம் கேட்டு எடுத்துச் செல்கிறோாம் என்று கூறியுள்ளாா். ‘மண் எடுக்க உத்தரவு இருந்தால் எடுங்கள். இல்லை என்றால் மண் எடுப்பதை நிறுத்துங்கள்’ என நடராஜன் கூறியுள்ளாா். இதையடுத்து மண் எடுப்பவா்களும் புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

அதன் பிறகு ஏரிக்கு வந்த வன்னியா் நகரைச் சோ்ந்த அசோக், கொட்டுக்காரம்பட்டியைச் சோ்ந்த கற்பூர சுந்தரபாண்டியன் ஆகிய இருவரும் நடராஜனிடம் ‘மண் எடுப்பதால் உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ஒழித்து விடுவோம். வந்து கவனித்துக் கொள்கிறோம்’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனா்.

பிறகு நடராஜன் தொழில் சம்பந்தமாக சென்னைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அசோக், கற்பூரசந்தரபாண்டியன், குமரேசன் ஆகியோா் தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து இவா்கள் மூவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடராஜன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஒன்று கூடி மற்றொரு புகாா் மனுவைக் கொடுத்தனா். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT