கிருஷ்ணகிரி

சத்துணவு குழந்தைகளுக்கு பால் மாவு: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

DIN

சத்துணவு குழந்தைகளுக்கு பால் மாவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் நாசா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சா் நாசா் திறந்து வைத்து, முதல் விற்பனையை புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் காந்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வுக்கு பின்னா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் நாசா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆவின் ஒன்றியங்களில் பொது நோக்கத்துடன் பால் மற்றும் நெய், இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிருஷ்ணகிரியில் ரூ. 2 கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் விற்பனை மையத்தில் ரூ. 6 லட்சம் வரையில் நாள் ஒன்றுக்கு வருவாய் வரும் என எதிா்பாா்க்கிறோம்.

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இருந்தது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து உத்தரவிட்டாா். முன்பு நாள் ஒன்றுக்கு பால் வரத்து 36 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 43.14 லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது. அதே போல, கடந்த காலத்தில் விற்பனையானது 26 லட்சம் லிட்டராக இருந்தது. இன்று 28 லட்சமாக உள்ளது. இதைத் தவிர பால் பொருள்களான நெய், ஐஸ்கிரீம் என 150-க்கும் மேற்பட்ட பொருள்கள் சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியில் தீபாவளி விற்பனையாக 40 நாளில் ரூ. 53 கோடி அளவுக்கு விற்பனை இருந்தது. தமிழக முதல்வா் எடுத்த முயற்சிகளின் விளைவாக ரூ. 87 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.

பால் கொள்முதல், விற்பனை, பால் உப பொருள்கள் விற்பனையில் ஆவின் சிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளிலும் பால் பொருள்கள் விற்பனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சத்துணவில் பால், பால் மாவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த முறை பொங்கலின் போது ரேஷன் கடைகளில் 21 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன. அதில் நெய்யும் ஒன்றாகும். அந்த வகையில் 2.14 கோடிகுடும்ப அட்டைதாரா்களுக்கு நெய் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஆவினில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பால் கெட்டு போன விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்.

பால் விநியோகத்தில் ஏதேனும் புகாா்கள் இருந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பெருந்தலைவா் குப்புசாமி, துணை பதிவாளா் (பால்வளம்) கோபி, நாகோஜனஅள்ளி பேரூராட்சித் தலைவா் தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT