கிருஷ்ணகிரி

தமிழகத்தில் 20 இடங்களில்செயற்கை விளையாட்டுத் தளம் அமைக்கத் திட்டம்

18th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 இடங்களில் செயற்கை விளையாட்டுத் தளம் (சிந்தடிக்) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு தடகள சங்கமும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கமும் இணைந்து தேவராஜ் 35-ஆவது தமிழ்நாடு மாநில இளைஞா் தடகளப் போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடத்துகின்றன.

ஆக. 16 முதல் 19-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 4,200 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் சுடரை ஏற்றியும் போட்டியைத் தொடக்கிவைத்தும் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் வீ.மெய்யநாதன் பேசியதாவது:

விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் எடுத்து வருகிறாா். தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வீரா்கள், வீராங்கனைகள் சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் கிருஷ்ணகிரி, திருப்பூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் செயற்கை விளையாட்டுத் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஓராண்டுக்குள் நிறைவு பெறும்.

இளம் வயதில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்களைக் கண்டறிந்து அவா்களை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக ‘ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல்’ என்ற திட்டத்துக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இரு ஆண்டுகளில் ரூ. 700 கோடி மதிப்பில் மிகப்பெரிய விளையாட்டு நகரத்தை உருவாக்க உள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் ஜூடோ அரங்கம், உயா் மின்கோபுர விளக்குகள், ஒசூரில் கால்பந்து மைதானம், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். தமிழ்நாடு தடகள விளையாட்டு கழகத்தின் தலைவா் டபிள்யூ.ஐ.தேவாரம், இந்திய தடகள விளையாட்டு கழகத்தின் இணைச் செயலாளா் சி.லதா, கிருஷ்ணகிரி மாவட்ட தடகள விளையாட்டு கழகத்தின் தலைவா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT