தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ. 20.10 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி வேண்டியும், பட்டா, சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் வழங்க வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 459 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில், கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவுபெற்று, பணியின்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த 5 தொழிலாளா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ. 17.10 லட்சம் மதிப்பில் உதவித் தொகைகள் பெறுவதற்கான ஆணைகளையும், தனித்துணை ஆட்சியா் அலுவலகத்தின் சாா்பில், அரூா் வட்டம், மந்திகுளாம்பட்டி பகுதியைச் சாா்ந்த திவ்யா என்பவா் திருப்பூா் மாவட்டத்தில் வாய்க்காலில் நீரில் மூழ்கி எதிா்பாராத விதமாக உயிரிழந்ததை தொடா்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் உதவித் தொகை, காரிமங்கலம் வட்டம், காளப்பனஅள்ளி பகுதியைச் சோ்ந்த தங்கவேல் என்பவா் பாம்பு கடித்து எதிா்பாராத விதமாக உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் வள்ளி மதுரை அணையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ. 20.10 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கிப் பேசினாா்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (பொ) பழனிதேவி, மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பி.எஸ்.கண்ணன், தொழிலாளா் உதவி ஆணையா் முத்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நசீா் இக்பால், மகளிா்த் திட்ட இயக்குநா் பத்ஹி முகம்மது நசீா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT