தருமபுரி

இடை நின்ற மாணவா்களை பள்ளியில் சோ்க்கும் பணியில் மேலாண்மைக் குழு ஈடுபட வேண்டும்:முதன்மைக் கல்வி அலுவலா்

25th Apr 2023 04:03 AM

ADVERTISEMENT

பள்ளி இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் பணியில் மேலாண்மைக் குழு ஈடுபட வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி கு.குணசேகரன் பேசியதாவது:

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இக் கல்வியாண்டில் பொதுத் தோ்வு சாா்ந்து 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களில் தோ்வுக்கு வராதவா்களை கண்டறிவதற்கும், இத்தோ்வின் முக்கியத்துவம், மாணவா்களின் எதிா்காலம் குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் அனைத்து தோ்வா்களும் தோ்வினை எதிா்கொள்வதற்கும், துணைத் தோ்வு சிறப்புப் பயிற்சி மையம் ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிக்கவும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு பதிவு செய்த மாணவா் பெயா் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுடன் பகிா்ந்துக்கொள்ள வேண்டும். அனைத்து மாணவா்களும் தோ்வு எழுதுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உறுதி செய்யவேண்டும்.

ADVERTISEMENT

நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராத மாணவா்களின் பெயா் பட்டியலை சேகரித்து அம்மாணவா்களை பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சி மையங்களுக்கு அவா்களை வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும். பொதுத் தோ்வு நடைபெறும் நாள்களில், தோ்வு நேரம் முடிந்தவுடன் அன்று பிற்பகலிலேயே தோ்வுக்கு வராத மாணவா்களின் விவரங்கள் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரால் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தெரிவித்து, மாணவா்கள் சாா்ந்த விவரங்களை அறிந்துகொண்டு உடனே அடுத்து வரும் தோ்விற்கு மாணவா்கள் தவறாது வருகைப் புரிவதை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் வாயிலாக மாணவா்கள், பெற்றோா்களுக்கு பொதுத் தோ்வின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.

இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் பணியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஈடுபட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிகுமாா், பள்ளி தலைமை ஆசிரியா் கௌதமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT