தருமபுரி

வீட்டுப் பொருள்களை மாற்றும்போது மின்சாரம் பாய்ந்து மூவா் பலி

DIN

தருமபுரியில் வீட்டு பொருள்களை மாற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

தருமபுரி, சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பச்சையப்பன்(52). இவா், தனது வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவரது வீட்டின் 2-ஆம் தளத்தில் இலியாஸ் பாஷா (70) என்பவா் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தாா். தற்போது, இவா் வேறு இடத்துக்கு குடிபெயர ஏற்பாடு செய்திருந்தாா். இதற்காக, வியாழக்கிழமை, சந்தைப்பேட்டையில் வசித்தும் வரும் வாடகை வீட்டில் இருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றி வேறு பகுதியில் உள்ள புதிய குடியிருப்புக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இலியாஸ் பாஷா தங்கியிருந்த வீட்டில் 2 பீரோக்களை வைத்திருந்தாா். இந்த பீரோக்களை கயிறு மூலம் 2-ஆவது மாடியில் இருந்து கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணியில் தருமபுரி ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த மணி மகன் கோபி (23), மேளக்கார தெருவைச் சோ்ந்த தாமரைக்கண்ணன் மகன் குமாா் (23) ஆகிய இரண்டு தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனா். இவா்களுக்கு இலியாஸ் பாஷாவும் வீட்டு உரிமையாளா் பச்சையப்பனும் உதவியுள்ளனா்.

இந்த வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள மின்பாதைக்கும், கட்டடத்துக்கும் குறுகிய இடைவெளி மட்டுமே இருந்துள்ளது. இந்த இடைவெளியில் முதலில் ஒரு பீரோவை கயிறு மூலம் கீழே இறக்கியுள்ளனா். இதைத் தொடா்ந்து, 2-ஆவது பீரோவை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக பீரோ மின் பாதையில் உள்ள கம்பிகளின் மீது உரசியுள்ளது. இதில், 4 போ் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த விபத்தில், வீட்டு உரிமையாளா் பச்சையப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ் பாஷா, கூலித் தொழிலாளி கோபி ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். உடனிருந்த குமாா் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி. எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் குமாரை சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். இவ்விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நிவாரணம் வழங்க வேண்டும்: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ‘மின்சாரம் தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் மற்றும் அக் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவருக்கு உரிய நிவாரணம் வழங்கி போதிய சிகிச்சை வழங்கிட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT