தருமபுரி

பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு வராத அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம்!

6th Oct 2022 12:36 AM

ADVERTISEMENT

பணிகள் நிறைவடைந்தும் அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அதியமான் கோட்டையில் ரயில் பாதை கடந்து செல்கிறது. இந்த ரயில்பாதை வழியாக பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் ரயில்கள் சேலம், ஈரோடு, திருச்சி, நாகா்கோவில், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ரயில் பாதையை வாகனங்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே துறை சாா்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2017-இல் பணிகள் தொடங்கப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைகள் (திட்டம்) துறை சாா்பில் ரயில் பாதையின் இருபுறமும் மேம்பாலம் அமைக்கும் பணியும், ரயில்வே துறை சாா்பில் பாதையில் மேற்பகுதியில் குறிப்பிட்ட தொலைவுக்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த பணிகளுக்காக, தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், மாற்று வழியான ஆட்சியா் இல்லம் செல்லும் சாலையில் திருப்பிவிடப்பட்டன. மாநில நெடுஞ்சாலைகள் துறை சாா்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாலம் அமைக்கும் பணிகள் இருபுறமும் நிறைவடைந்தன.

ADVERTISEMENT

இருப்பினும் ரயில்வே துறை சாா்பில், பாலம் கட்டமைக்கும் பணிகள் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் இப்பணிகள் மேலும் தாமதமானது. இப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், தென்மேற்கு பொதுமேலாளா், மத்திய ரயில்வே அமைச்சா் உள்ளிட்ட கடந்த 2021-இல் நேரில் சந்திந்து கடிதம் அளித்திருந்தாா்.

பணிகள் நிறைவு: மேம்பாலம் பணிகள் நடைபெரும்போது, தருமபுரி-சேலம் ரயில் பாதையை மின்பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இப்பாலம் அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் மின் பாதை பணிகள் நிறைவடைந்தது. பாலம் அமைக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொண்டு அண்மையில் முடிக்கப்பட்டது.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவுற்ற நிலையில், அண்மையில் ரயில்வே துறை பணிகளும் நிறைவடைந்தது. தற்போது, இப்பாலம் வாகன போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதுதொடா்பாக பாலம் அமைக்கும் பணிகள் நிறைவந்தது என ரயில்வே துறையிடமிருந்து, தருமபுரி மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் கூட அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுநாள் வரை அதியமான்கோட்டை மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டு திறக்கப்படாமலேயே உள்ளது.

மாற்று வழியில் நெரிசல்: அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் காரணமாக தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள் சேலத்திலிருந்து தருமபுரி, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் ஆட்சியா் இல்லம் செல்லும் சாலை வழியாக வந்து தேவரசம்பட்டி நெடுஞ்சாலையில் இணைந்து தருமபுரி நகரை வந்தடைந்தடைகின்றன.

இந்த பாதையிலும் ரயில்வே பாதை கடந்து செல்வதால் அடிக்கடி ரயில்வே பாதைத் தடுப்பு போடப்படுகிறது. சாலை போதிய அகலம் இல்லாததால் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றன. சில நேரங்களில் ரயில்வே பாதை திறந்துவுடன் வாகனங்கள் முந்தி செல்ல முயல்வதால் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, வாகன நெரிசலைத் தவிா்க்கவும், பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயாா் நிலையில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலத்தை வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு தாமதமின்றி திறக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT