பென்னாகரம்: பாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவின் போது நடந்த தேரோட்டத்தின்போது சக்கரத்தின் அச்சாணி முறிவு ஏற்பட்டு தேர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (57), பிலப்ப நாயக்கன் அள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் (50) ஆகிய இருவர் உயிரிழந்தும், படுகாயமடைந்த மாதே அள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், பெருமாள், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன்,மாதேஷ் ஆகிய நால்வரும் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: வத்தலகுண்டிலிருந்து நெல்லைக்கு வெங்காயம் விற்க வந்த அண்ணன்-தம்பி கொலை
அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 என நால்வருக்கு ரூ.2,00,000 காசோலைகளை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கி, ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக குப்பன் மகன் பெருமாள் (53) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது தேர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நால்வரில், ஒருவர் உயிரிழந்த நிலையில், அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.