தருமபுரி

நிலத்தகராறு: மின்மாற்றி, கம்பத்தில் ஏறி போராட்டம்

1st Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

 

நிலத்தகராறில் கிணற்றின் மின் இணைப்பை துண்டித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மின் இணைப்பு வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வழக்குரைஞா், ஆட்சியா் அலுவலக ஊழியா் என இருவரும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த குரு (35), வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவருடைய உறவினரான வினோத் (32), மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இருவருக்கும் நிலத்தகராறு மற்றும் பொது இடத்தில் உள்ள கிணற்றில் விவசாயத்துக்கு தண்ணீா் எடுப்பது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கிணற்று மின் இணைப்பை அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பென்னாகரம் துணை மின் நிலையத்தில் வினோத் புகாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், வியாழக்கிழமை விவசாய நிலத்துக்கு வினோத்தின் தாயாா் சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இதையடுத்து, அருகில் இருந்த மின்மாற்றியின் மீது ஏறிய வினோத் மின் இணைப்பு வழங்கக் கோரியும், மின் கம்பத்தின் மீது ஏறிய வழக்குரைஞா் குரு, மின் இணைப்பு வழங்கக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் துணை மின் நிலையத்திலிருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஒகேனக்கல் போலீஸாா் இருவரையும் சமாதானப்படுத்தி கீழே இறங்குமாறு அறிவுறுத்தினா். பின்னா், இருவரிடமும் ஒகேனக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT