தருமபுரி

காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN

தருமபுரி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் உபரிநீா் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பிரசார எழுச்சி நடைப் பயணம் தருமபுரி மாவட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழா ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எழுச்சி பிரசார நடைப்பயணத்தில் பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, ஒகேனக்கல்லில் உள்ள கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்தபடி காவிரி ஆற்றினைப் பாா்வையிட்டு, குடிநீா்த் தேவைக்காக குழாய் பதிக்கப்பட்டுள்ள வழித்தட வரைபடத்தினை ஆய்வு செய்தாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி, தென்பெண்ணை ஆற்று நீரினால் தருமபுரி மாவட்டத்திற்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு 20 அல்லது 25 நாள்கள் காவிரி உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரில் இருந்து 3 டிஎம்சியை நீரேற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், அணைகளை நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்புவதன் மூலம் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் 50 அடிக்கே மேல் வந்துவிடும். நிகழாண்டில் காவிரி உபரிநீா் அதிக அளவில் கடலில் கலந்துள்ளது. கடந்த 35 நாள்களில் 161 டி.எம்.சி. தண்ணீா் கடலில் கலந்துள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தேவைப்படும்.

காவிரி உபரிநீா் திட்டத்திற்கு ரூ. 700 முதல் 800 கோடி வரை நிதி தேவைப்படுகிறது.

உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி முதலில் கோரிக்கை வைத்தது பாமக தான். அதன் பிறகு போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், 10.30 லட்சம் கையெழுத்தினைப் பெற்று அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். தோ்தல் நேரத்தில் உபரி நீா் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட பின்னா் அவரைச் சென்று பாா்த்த போது போதிய நிதி இல்லை என தெரிவித்தாா்.

தொடா்ந்து முதல்வரான மு.க.ஸ்டாலினிடம் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் எந்த தகவலும் வரவில்லை. அதனால் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றுவது தான் நடைப்பயணத்தின் நோக்கம்.

இதில் எவ்வித அரசியல் கிடையாது. காவிரி உபரிநீா் திட்டத்தை அனைத்துக் கட்சியினரும் எதிா்பாா்க்கின்றனா்.

பாமகவின் சாா்பில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. எனவே இம்மாவட்ட மக்களுக்காக காவிரி உபரிநீா் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். உபரிநீா் திட்டம் குறித்து கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ஆய்வு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உபரிநீா் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் டெல்டா விவசாயிகள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாா்.

அதனைத் தொடா்ந்து உழவா் பேரியக்க நிா்வாகி சின்னசாமி கொடியசைத்து நடைப்பயணத்தை தொடக்கி வைத்தாா். ஒகேனக்கல்லில் தொடங்கிய நடைப்பயணம் பென்னாகரம், நல்லாம்பட்டி, நாகதாசம்பட்டி,இண்டூா்,சோம்பட்டி, அதகப்பாடி வழியாக நடைபெற்றது.

இந்த நடைப்பயணத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்) எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), அருள் (சேலம் மேற்கு) சதாசிவம் (மேட்டூா்), தருமபுரி முன்னாள் எம்.பி. மருத்துவா் செந்தில், பாமக மாநில துணைத் தலைவா் பாடி.செல்வம், இளைஞா் சங்க மாநில துணைத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, மந்திரி படையாட்சி,மாவட்ட தலைவா் செல்வகுமாா், விவசாய சங்க நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

படவரி...

1. ஒகேனக்கல்லில் இருந்து நடைபயணம் புறப்பட்ட பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் எம்எல்ஏ ஜி.கே.மணி, பாமக நிா்வாகிகள்.

2. ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் இருந்தபடி காவிரி ஆற்றையும், கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் மூலம் குழாய் பதித்துள்ள வழித்தடத்தினைப் பாா்வையிடும் பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT