தருமபுரி

புலம்பெயா்ந்த தமிழா்களின் மேம்பாட்டுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது

DIN

புலம்பெயா்ந்த தமிழா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது என மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி அணையில் புலம்பெயா்ந்த இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 227 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டும் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் முன்னிலை வகித்து பேசினாா்.

புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத் திட்ட உதவிகளை வழங்கி, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், புலம்பெயா்ந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தாா். அதனடிப்படையில், தற்போது தமிழகம் முழுவதும் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நாகாவதி அணை, தொப்பையாறு அணை, மதிகோன்பாளையம், தும்பலஅள்ளி அணை, சின்னாறு அணை உள்பட 8 இடங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இவற்றில், 721 குடும்பத்தினா் உள்ளனா். இவா்களுக்கு தற்போது, 227 வீடுகள் கட்டும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு எப்போதும் புலம்பெயா்ந்த தமிழா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் குடிநீரில் புளோரைடு பாதிப்புகளைக் குறைக்கும் விதமாக அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீா் வழங்க முந்தைய திமுக ஆட்சியில் ஒகேனக்கல் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை கடந்த 10 ஆண்டுகளாக முறையாகச் செயல்படுத்தாமல், மீண்டும் புளோரைடு கலந்த தொட்டிகளில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தவிா்க்க, தற்போது ரூ. 50 கோடி மதிப்பில் 486 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் அனைத்துக் கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேபோல, மழைக் காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்லும் மிகை நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட ஏரிகளுக்கு நீரேற்றுத் திட்டத்தின் மூலம் நிரப்பிட ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த, அண்டை மாநிலங்களிலிருந்து சுமாா் 600 டன் தக்காளி பெறப்பட்டு, தக்காளி விலை உயா்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தக்காளி கிலோ ரூ. 45 முதல் ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்படுகிறது என்றாா்.

இவ் விழாவில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பி.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மகளிா் திட்ட அலுவலா் பி.பாபு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அன்பரசன், வட்டாட்சியா்கள் அசோக்குமாா், மனோகரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT