திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து தொடா்ந்து தண்ணீா் திறப்பு

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும்போதெல்லாம் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

குறிப்பாக, திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதிகளுக்கு தற்போது கால அளவு நீட்டிக்கப்பட்டு அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த அலங்கியம் முதல் கரூா் வரையில் உள்ள 10 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக ஆற்றின் மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு உரிய கால இடைவெளிவிட்டு 691 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதுபோக திருப்பூா் மாவட்டத்தில் 25, 250 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் 532 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது. இதனால், 47,117 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் என்றனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 71.10 அடி நீா் இருப்பு காணப்பட்டது.

4, 035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2, 476.26 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது.

அணைக்கு 117 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 300 கன அடி நீா் வெளியேறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT