திருப்பூர்

மாவட்டத்தில் 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் வரும் அக்டோபா் 2ஆம் தேதி 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் விசிக அறிவித்துள்ளது.

திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ஆம் தேதி 50 இடங்களில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

ஆகவே, சங்பரிவாா்களின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படியில், திருப்பூா் மாவட்டத்தில், திருப்பூா் மாநகரம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் பல்லடம் ஆகிய 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ் ரவிசந்திரன், புறநகா் மாவட்டச் செயலாளா் கே.எம்.இசாக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மூா்த்தி, தெற்கு மாநகர செயலாளா் ஜெயபால், விடுதலை சிறுத்தை கட்சிகளின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்முத்து, திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்வேந்தன், திருப்பூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT