திருப்பூர்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் லட்சதீபம்!

DIN

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் புதன்கிழமை ஒரு லட்சத்து எட்டு தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அவிநாசியப்பர் மற்றும் கருணாம்பிகையம்மனுக்கும் கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. 

வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்த சந்திரசேகரர் அம்பாள்.(வலது) வெள்ளி மயில் வாகனத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறையினர், அவிநாசி ஆன்மீக நண்பர்கள் குழு, சேக்கிழார் புனிதப் பேரவையினர் சார்பில், லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

கோயில் சபா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கனகசபை, முன்மண்டம், சுவாமி சன்னதிகள், பிரகாரம் ஆகியவற்றில் லிங்க வடிவம், வேல் மயில் வடிவம், நந்தி வடிவம், சிவன் பார்வதி வடிவம், நடராஜர், ரிஷப வாகனம் என வரையப்பட்டும், வடிவங்கள் அமைக்கப்பட்டும் லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, அகல் விளக்குகளை வரிசைப்படுத்துவது, தீபம் ஏற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். 

மாலை 6 மணி அளவில் கோவில் முன்புறம் உள்ள 100 அடி உயர தீப ஸ்தம்பத்தில் ராக தாளங்கள், அரோகரா கோஷம் முழங்க கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர், அம்பாள், வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீப தரிசனம் செய்து அவிநாசியப்பரை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோயில், பழங்கரை பொன்சோழிஸ்வரர் கோயில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோயில், சேவூர் அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயில், குட்டகம் மொக்கணீஸ்வரர் கோயில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT