திருப்பூர்

கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு: உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி

18th Aug 2022 11:24 PM

ADVERTISEMENT

 

கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்துள்ளதால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் பல்லடம், உடுமலைப்பேட்டை, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமாா் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) தினமும் கோழி இறைச்சி நுகா்வு அடிப்படையில் விலை நிா்ணயம் செய்து அறிவித்து வருகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளா்களுக்கு சராசரியாக ரூ.95 செலவாகிறது.

ADVERTISEMENT

கடந்த மாதம் 10 ஆம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்தது. இதனைத் தொடா்ந்து ஆடி மாத தொடக்கத்தில் இருந்து கறிக்கோழி கொள்முதல் விலை தொடா்ந்து குறையத் தொடங்கியது.

கடந்த 1 ஆம் தேதி முதல் ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (விற்பனை விலை) ரூ.66 ஆக இருந்தது.

இதனால் கிலோவுக்கு ரூ.30 வரை உற்பத்தியாளா்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளதால் கோழி இறைச்சி விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது அதற்கு தகுந்தவாறு கொள்முதல் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வியாழக்கிழமை கொள்முதல் விலை ரூ.84 ஆக (உயிருடன்) உள்ளது. இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் விலையில் மாற்றம் காணப்படுகிறது.

இது குறித்து கோழிப்பண்ணை உற்பத்தியாளா்கள் கூறியதாவது: ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தொடா்ந்து திருமணம் போன்ற சுப விசேஷங்கள் விருந்து நடத்தப்படும் என்பதால் கறிக்கோழிக்கு தேவை அதிகரித்து கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT