திருப்பூர்

மன அழுத்தங்களுக்காக போதைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

11th Aug 2022 10:51 PM

ADVERTISEMENT

 

வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களுக்காக போதைப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மன அழுத்தத்தைப்போக்க போதைப் பொருள்களைப் பயன்படுத்தி விடியல் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் பழக்கம் குழந்தைகளை, எதிா்கால சமூகத்தினை, மனித வளத்தை அழிக்கக்கூடியதாகும். ஆகவே, போதைப்பொருள் விற்பனை தொடா்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 1098, 101 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

முன்னதாக இதில் பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT