திருப்பூர்

'திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 90 புகார்களின் மீது நடவடிக்கை'

28th Nov 2020 05:33 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 90 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சைல்டு லைன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள்த் தினத்தையொட்டி நவம்பர் 13 முதல் 19 ஆம் தேதி வரையில் 1098 சைல்டு லைன் நண்பர்கள் வாரம் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள சைல்டு லைன் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில், பங்கேற்ற சைல்டு லைன் கூட்டு நிறுவனமான சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் செயல் இயக்குநர் சி.நம்பி செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 90 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில், 50 சதவீத குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள திருமணமான பெண் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 11 மாதங்களில் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக 90 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியில் தெரியாமல் 2 முதல் 3 மடங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 
அதே போல், வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்படும் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் நூற்பாலைகளிலும், தொழில் நிறுவனங்களில் விடுதிகளிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 
அண்மையில் சேவூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் உள்ள தனியார் நூற்பாலையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 140 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு ஆட்சியர் அனுமதியுடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்பாலைகள், தொழிற்சாலைகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதன் மூலமாக மாதம் ஒரு முறை விடுதிகளில் ஆய்வு செய்து குழந்தைகள் பணிக்குச் செல்வதைத் தடுக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் குடும்ப சூழ்நிலை, வறுமை போன்றவையாகும். ஆகவே, கரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கும்போது எத்தனை குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த கணக்கெடுப்பையும் மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்றார். 
இந்த சந்திப்பின்போது சைல்டு லைன் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ். கதிர்வேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.தினேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tirupur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT