திருப்பூர்

சுய ஊரடங்கு: திருப்பூரில் முழுமையாக கடைப்பிடித்த பொதுமக்கள்

23rd Mar 2020 02:21 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு திருப்பூரில் பொதுமக்களால் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி, அதனைச் சாா்ந்த நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.

மேலும், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இதனால், திருப்பூரில் பரபரப்பாக காணப்படும் காமராஜா் சாலை, புது மாா்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, பெருமாநல்லூா் சாலை, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதி, திருப்பூா் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே வெறிச்சோடி காணப்பட்டன.

திருப்பூரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினாா்கள்.

திருப்பூா் மாநகா், புறநகா்ப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியா்களைப் பணியில் அமா்த்தி செயல்பட்டன. அதே வேளையில், மங்கலம் பகுதியில் இரு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

கூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை:

திருப்பூா் மாநகா் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆடு, மீன் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவு பொதுமக்கள் திரண்டிருந்தனா். இதனால் மீன் இறைச்சி வழக்கத்தை விட கிலோவுக்கு ரூ.50 வரையில் அதிகமாகவும், ஆட்டிறைச்சி ரூ.100 வரையிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மருந்தகங்கள் செயல்பட்டன: இதனிடையே, திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்பட்டன. மேலும், ஒரு சில இடங்களில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பாலகங்கள் மட்டும் திறந்திருந்தன.

திருப்பூருக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையமும் வெறிச்சோடிக்கணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT