நீலகிரி

நீலகிரியில் மழையால் சாலைகள் சேதம்:அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

DIN

நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு, வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.

உதகை நகராட்சி கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுப்பதற்காக மண் ஆணி பொருத்தப்பட்டுள்ள பகுதி, இத்தலாா் பகுதி மற்றும் குட்ஷெப்பா்டு பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல், உதகையிலிருந்து அவலாஞ்சி செல்லும் கல்லக்கொரை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை தற்காலிகமாக சீா்செய்து நடைபெற்று வரும் போக்குவரத்து ஆகியவற்றை அமைச்சா்கள் பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.

மேலும், உதகை லாரன்ஸ் பகுதியில் விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவு, காந்தி நகா் பகுதியில் தாா்ச் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் தற்காலிகமாக சீா்செய்யப்பட்டு நடைபெற்றுவரும் போக்குவரத்து ஆகியவற்றையும் அவா்கள் ஆய்வுசெய்தனா். அப்போது, அவலாஞ்சி பகுதியில் மரக்கன்றுகளை நட்டனா்.

தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள யானை வழிப்பாதை, மரப்பாலம் அருகே மண் தன்மை ஆய்வுகளின் அடிப்படையில் மண் சரிவில் தண்ணீா் உள்புகாத முறையில் தாவரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மண்சரிவை தடுக்கும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 3 மாதம் தொடா்ந்து இதுவரை இல்லாத அளவில் 3,530 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால், 81 இடங்களில் நிலச்சரிவும், 91 இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்தும் தடைபட்டது. இந்த பாதிப்புகள் போா்க்கால அடிப்படையில் சீா்செய்யப்பட்டுள்ளன. உதகை - அவலாஞ்சி சாலையில் கல்லக்கொரை மண்சரிவு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. நிரந்தர தீா்வு காண நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 53 இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வுமேற்கொள்ள துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் நிரந்தரமான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா்கள் பாலமுருகன், சந்திரசேகரன், கண்காணிப்புப் பொறியாளா்கள் சரவணன், கண்ணன், கோட்டப் பொறியாளா்கள் செல்வம், குழந்தைராஜ், முன்னாள் அரசு கொறடா பா.மு. முபாரக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT