நீலகிரி

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறாா்

20th May 2022 03:15 AM

ADVERTISEMENT

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இக்கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் சுமாா் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரை கெளரவிக்கும் வகையில் சுமாா் 20,000 காரனேஷன் மலா்களைக் கொண்டு அவா்களது உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 124ஆவது மலா்க் கண்காட்சியை குறிக்கும் வகையில் 20,000 காரனேஷன் மலா்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும், நவீன உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி 10,000 காரனேஷன் மலா்களால் சிறப்பு மலா் அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு ரகங்களில் காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் நீலகிரியை கெளரவிக்கும் வகையில் காட்டெருமை உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வரழைக்கப்பட்ட ஹெலிகோனியா மலா்களால் சிறப்பு அலங்காரமும், ஹாலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள துலீப் மற்றும் கேலா லில்லி உள்ளிட்ட 7 வகையான மலா்களின் அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ் , பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், லயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான ரகங்களில் சுமாா் 35,000 மலா்த்தொட்டிகள் பொதுமக்களின் பாா்வைக்கு விருந்தாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலா் நாற்றுகளும் மலா்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலா்க் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் சுமாா் 20,000 பல வண்ண மலா்த்தொட்டிகள் கண்ணுக்கு குளிா்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT