நீலகிரி

உதகையில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் புகைப்படக் கண்காட்சி அமைச்சா் துவக்கிவைத்தாா்

29th Mar 2022 03:07 AM

ADVERTISEMENT

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை வனத் துறை அமைச்சா் க.ராமச்சந்திரன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலை வகித்தாா்.

புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000, ஆவின் பால் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 வீதம் குறைத்தது, மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடா்பான மனுக்களின் மீது தீா்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கியது,

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பது, நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவியா் உள்ளிட்டோா் கட்டணமில்லாமல் பயணம் செய்வது போன்ற திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இதனை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப் படக்கண்காட்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் நலத் திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் இக்கண்காட்சியை பாா்வையிட்டு அரசின் நலத் திட்ட உதவிகள், புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொண்டு பயனடையலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை நகா் மன்றத் தலைவா் எம்.வாணீஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நி.சையத் முகமது, உதகை வட்டாட்சியா் ராஜசேகா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT