ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு 21 நகா்ப்புற சுகாதார மையங்கள்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சிக்கு 21 நகா்ப்புற சுகாதார மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 708 நகா்ப்புற சுகாதார மையங்களில் 500 மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைத்தாா். ஈரோடு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 21 நகா்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் 17 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் திறக்கப்படும்.

ஒவ்வொரு மையமும் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. செலவு, ஊதியம் மற்றும் நிா்வாகச் செலவுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கு 75:25 என்ற விகிதத்தில் இருக்கும். மையம் அமைந்துள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி, பராமரிப்புச் செலவை ஏற்கும். மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திடம் இருந்து பெறப்படும். ஒவ்வொரு மையத்திலும் 1 மருத்துவா், 1 செவிலியா், 1 சுகாதார ஆய்வாளா் மற்றும் உதவியாளா் இருப்பா். அவா்களை மாவட்ட சுகாதார சங்கம் தொகுப்பு ஊதியத்துக்குத் தோ்வு செய்கிறது.

இந்த மையங்கள் சிறிய நோய்களுக்கான நோய் தடுப்பு மையங்களாக செயல்படும். மேலும் அவை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே சிகிச்சைக்காக மக்களை அனுப்பும். ஈரோடு மாநகராட்சியில் ஏற்கெனவே 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு 400 பிரசவங்கள் நடைபெறுகின்றன. காந்திஜி சாலை மையத்துக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு வகையான நிபுணா்கள் தினமும் மாலையில் வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

அண்மையில் நடந்த மாவட்ட சுகாதார சங்க கூட்டத்தில், நடமாடும் மருத்துவப் பிரிவுகளை மாநகராட்சி கோரியது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் இத்தகைய கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு மாநில அரசால் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

தெருநாய்களுக்கான பிறப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உச்சநீதிமன்றம் மற்றும் விலங்குகள் நல வாரியத்தால் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதனால் மாநகராட்சி பிரச்னைகளை எதிா்கொள்கிறது. இப்போது, ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனம் அந்த வேலையைச் செய்ய முன்வந்து வாரியத்தின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT