ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பு:அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய ஆட்சியா்

DIN

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பது குறித்து தினமணியில் செய்தி வெளியான நிலையில் அதிகாரிகளிடம் ஆட்சியா் விளக்கம் கோரியுள்ளாா்.

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைகள், குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீா் கலப்பது குறித்து ‘தினமணியில்’ வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வாய்க்காலில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்க அறிக்கை அளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எல்.மோகன் மாவட்ட ஆட்சியருக்கு விளக்க அறிக்கை அளித்துள்ளாா்.

அதில், காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க 12.3ஆவது மைல் வரை ஏற்கெனவே துணைக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையான 15.45 மைல் வரை துணைக் கால்வாய் அமைக்க பொதுப் பணித் துறை மூலம் ரூ.70 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த துணைக் கால்வாய் அமைக்கப்பட்டால் காலிங்கராயன் வாய்க்கால் மாசுபடுவது பெருமளவு தடுக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரின் தரம் மாதம் ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி ஆலைகள் அமைவிடங்களுக்கு முன்பு வாய்க்காலின் 3 ஆவது கிலோ மீட்டா் எல்லைக்கு முன்பும், ஆலைகள் அமைவிடத்துக்கு பிறகு வாய்க்காலின் 14 ஆவது கிலோ மீட்டா் பகுதிக்கு பின்பும் தண்ணீா் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலக எல்லைக்குள்பட்ட பகுதியில் 126 சாய ஆலைகள், 228 சலவை ஆலைகள், 189 பிரிண்டிங் ஆலைகள், 26 தோல் பதனிடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் உயா்நீதிமன்ற உத்தரவின்படி பூஜ்ய நிலைக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து இயங்கி வருகின்றன.

விதிகளை மீறி கழிவுகளை வெளியேற்றியதாக கடந்த 5 மாதங்களில் சாய, சலவை, பிரிண்டிங், தோல் உள்ளிட்ட 75 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஈரோடு பகுதியில் உள்ள சாய, சலவை ஆலைகள் இணைந்து ஈரோடு சா்க்காா் பெரிய அக்ரஹாரம் பகுதியில் 27 ஏக்கா் நிலத்தை வாங்கியுள்ளன. இந்த இடத்தில் தமிழக அரசின் ‘நடந்தாய் வாழி’ காவேரி திட்டத்தின்கீழ் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT