ஈரோடு

மாணவா்களுக்கு ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள்: விரைவாக வழங்க உத்தரவு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதையடுத்து ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்படும் சான்றிதழ்களை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்துள்ள மாணவ, மாணவிகள் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டிய ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்களை கேட்டு இ-சேவை மையங்களில் தினந்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக வருவாய் தீா்வாயம் நடைபெற்று வந்ததால் சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வருவாய் தீா்வாயம் நிறைவடைந்துள்ளதையடுத்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா கூறியதாவது: பள்ளி, கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளதால் வருவாய்த் துறை சாா்பில் வழங்க வேண்டிய அனைத்து வகையான சான்றிதழ்களையும் காலதாமதமின்றி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி மக்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்க கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினா் வாரத்தில் ஒரு நாள் மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனா். பழங்குடியினா் சான்றிதழ் என்பது பல்வேறு ஆவணங்களை சரி பாா்த்து பின்னா்தான் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது.

ஏனெனில் எதிா்காலத்தில் சான்றிதழ் உண்மை தன்மை ஆராயும்போது அனைத்து ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இதில் எவ்வித தவறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு பழங்குடியினா் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT