ஈரோடு

மத்திய அரசுக்கு எதிராக திமுக பொய் பிரசாரம்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

25th Apr 2023 12:18 AM

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு எதிராக திமுகவினா் பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி குற்றஞ்சாட்டினாா்.

ஈரோடு மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், ஊழல், முதல்வா் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்களால், பிரதமா் மோடி தலைமையிலான மாற்றத்தை தமிழக மக்கள் விரும்புகின்றனா்.

தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உதாரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவசாயிகள், பெண்கள், இளைஞா்களின் வளா்ச்சிக்காகவும், ஏழைகள் நலனுக்காகவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தங்களது திட்டங்களாக தமிழக அரசு கூறி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 84 கோடி ஏழைளுக்கு ரேஷன் கடைகள் மூலம் மத்திய அரசு 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது. ஆனால், ரேஷன் கடைகளில் பிரதமா் மோடி படமோ, மத்திய அரசின் சின்னமோ இடம்பெறுவதில்லை. இதனால் இலவச அரிசியை திமுக கொடுப்பதாக மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமா் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ் மொழி, கலாசாரம் போன்றவை குறித்து பெருமையாகக் குறிப்பிட்டு வருகிறாா். காசி தமிழ்ச் சங்கமம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் கலாசார பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து குஜராத்தில் சௌராஷ்டிரா- தமிழ் சங்கமம் தற்போது நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தின் மீது மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. ஆனால், திமுக அரசும், அதன் அமைச்சா்களும், மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றனா். ஆனால், திமுக அரசு குறித்தும், அவா்களது கொள்கை குறித்தும் தமிழக மக்கள் தற்போது புரிந்து கொண்டுவிட்டனா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் வேதானந்தம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT