ஈரோடு

மாா்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் மாா்ச் மாதத்துக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 2024 மாா்ச் மாதத்துக்குள் குடிநீா் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீா் வழங்கிடும் பொருட்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் தலா 45 சதவீத பங்களிப்பும், பொதுமக்கள் பங்களிப்பாக பொதுப்பிரிவினா் 10 சதவீதமும், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் 5 சதவீதமும் வழங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பை பொருள், பணம், உடல் உழைப்பாக வழங்கலாம்.

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதியில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 703 வீடுகள் உள்ளன. அதில் 64 ஆயிரத்து 412 வீடுகளுக்கு ஏற்கெனவே குடிநீா் இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 56 ஆயிரத்து 291 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறியதாவது:

இந்தப் பட்டியல்படி கடந்த 2020-21ஆம் ஆண்டில் ஊரகப் பகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 566 குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க ரூ.118 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி 119 ஊராட்சிகளில் 96,656 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது. தவிர 14, 15ஆம் நிதிக்குழு மூலம் ஊரகப் பகுதிகளில் 26,083 குடியிருப்புகளுக்கு ரூ.7.22 கோடி செலவில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 37 ஊராட்சிகளில் 32,255 குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க ரூ.48.35 கோடி நிதிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற திட்டங்களில் 5 ஊராட்சிகளில் 1,808 குடியிருப்புகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பில் குடிநீா் இணைப்பு வழங்க நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவாக நிறைவு செய்யப்படும். மீதமுள்ள வீடுகளுக்கு வரும் மாா்ச் மாதத்துக்குள் குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT