ஈரோடு

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தரம் உயா்த்தப்படும்: அமைச்சா் சு.முத்துசாமி

DIN

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு பரிசுகள், புதிய காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். எம்.பி. அ.கணேசமூா்த்தி, எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவப் பணிகள் இணை இயக்குா் பிரேமகுமாரி வரவேற்றாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மணி பேசுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் 1.37 லட்சம் போ் காப்பீடு செய்துள்ளனா்’ என்றாா்.

புதிய காப்பீட்டு அட்டை, காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைந்தோருக்கு பரிசு, காப்பீட்டில் சாதனை செய்த அலுவலா்களுக்கு பரிசு, காப்பீட்டுத் திட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்குப் பரிசுகளை வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். ஈரோடு மாவட்டத்தில் 7 அரசு மருத்துவமனைகளில், 50 தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை பெறலாம். கடந்த ஆண்டு 18,189 பயனாளிகள் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனா். இதற்காக ரூ.16.97 கோடி அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் 4,074 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனா்.

குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் என்ற சான்று வழங்கினால், காப்பீட்டு அட்டை பெறலாம். அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உள்ள காப்பீட்டு மையங்களில் விண்ணப்பித்து அட்டை பெறலாம். அட்டை கிடைக்க தாமதம் ஆவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில இடங்களில் எச்1என்1 காய்ச்சல் பரவுவதாக தகவல் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த பாதிப்பு இல்லை. ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆா்ஐ ஸ்கேன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி விரைவில் வந்துவிடும். தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும் என்றாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி, மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ், முதல்வா் காப்பீடு திட்ட மாவட்ட திட்ட அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT