ஈரோடு

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு அனுமதியளிக்கக் கோரிக்கை

30th Jun 2022 10:29 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தியை தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சுரேஷ் தலைமையில், விசைத்தறி உரிமையாளா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில், உதவி இயக்குநா் சரவணனிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை 223 விசைத்தறித் தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்களுக்கு உள்பட்ட 67,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளிச் சீருடைகள் மற்றும் பொங்கல் பண்டிகையன்று நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் 3.60 கோடி வேட்டி, சேலை உற்பத்தி செய்து, பல ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக பல ஆயிரம் தறிகள் வேலையில்லாமல் நெசவாளா்களும், அவா்களை சாா்ந்தவா்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்று வருவது வழக்கம்.

ஆனால் நடப்பு ஆண்டில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனா். இதனால் வேட்டி,சேலை வடிவத்தில் எந்தவித மாறுதல் இல்லாமல், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும், தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.

கடந்த ஆண்டு வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்டதால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான உற்பத்தியை விரைவில் தொடங்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT